உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

This website will display in the language you choose.

இருமொழி பேசுபவருக்கும், மொழிபெயர்த்துரைப்பாளருக்கும் என்ன வேறுபாடு?

Category நுகர்வோர் ஆதாரவளங்கள் வெளியிடப்பட்டது 15 January 2026

அனைத்து மொழிபெயர்த்துரைப்பாளர்களும் இருமொழி பேசுபவர்கள்தான், ஆனால் இருமொழி பேசும் அனைவரும் மொழிபெயர்த்துரைப்பாளர்களாக இருக்க முடியாது.

  • மொழிபெயர்த்துரைப்பாளர் என்பவர், இரு கலாச்சாரத் திறன்களைக் கொண்ட, இருமொழிகளில் பயிற்சி பெற்ற ஒரு தொழில்முறை நிபுணர் ஆவார், அவர் ஒரு நன்னெறிக் கோட்பாட்டிற்குக் கட்டுப்பட்டவர். ஆஸ்திரேலியாவில் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராகப் பணியாற்றுவதற்கான சமூகத் தரம், NAATI-ஆல் சான்றளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
  • இருமொழி பேசுபவர் இரண்டு மொழிகளைப் பேசக்கூடியவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராகப் பயிற்சி பெற்றிருக்க மாட்டார், மற்றும் எந்தவொரு நன்னெறிக் கோட்பாட்டுக்கும் கட்டுப்பட்டவராக இருக்க மாட்டார்.

மொழிபெயர்த்துரைப்பாளர்களை வேறுபடுத்துவது எது?

பயிற்சி மற்றும் சான்றிதழ்

தொழில்முறைத் திறனுடன் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கு முறையான பயிற்சி தேவை. சான்றிதழ் வழங்குவதற்கு முன் NAATI அவர்களின் திறன்களையும் அனுபவத்தையும் சரிபார்க்கிறது, எனவே அவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

மொழி மற்றும் பரிமாற்றத் திறன்கள்

மொழிபெயர்த்துரைப்பாளர்கள் துல்லியமாகவும் தொழில்முறையுடன் செயல்படுவதை உறுதிசெய்ய, NAATI பலதரப்பட்ட திறன்களை மதிப்பீடு செய்கிறது. இதில் மொழித்திறன், நினைவாற்றல், தெளிவுபடுத்த விளக்கம் கேட்கும் நம்பிக்கை, ஒரே நேரத்தில் பலர் பேசும் உரைகளைக் கையாளும் திறன், பேசுபவர்களின் தொனி மற்றும் பாணிக்கு ஏற்பப் பொருந்தும் திறன் போன்றவை அடங்கும். கூறப்படுவதில் உள்ள கலாச்சார அர்த்தங்களை அடையாளம் காணுவதிலும், அவற்றை மற்ற மொழியில் சிறப்பாகத் தெரிவிப்பதிலும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் திறமையானவர்கள்.

தொழில்முறை நடத்தை

மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஒன்பது வழிகாட்டும் கொள்கைகளைக் கொண்ட ஒரு நன்னெறிக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மொழிபெயர்த்துரைப்பாளர்கள் துல்லியமாகவும், பாரபட்சமின்றியும், இரகசியத்தைக் காப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஒப்புதல் இன்றி அவர்கள் தகவல்களைப் பகிர மாட்டார்கள் (சட்டப்படி தேவைப்படும் சூழலைத் தவிர்த்து). அவர்கள் தங்கள் பணியில் நெறிமுறை சார்ந்த சிக்கல்களைக் கையாள்வதிலும் திறமையானவர்கள்.

சிறப்பு அறிவு

பல மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சட்டம் அல்லது சுகாதாரப் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது, அவர்களின் கலைச்சொற்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளும்போது, அது துல்லியமாக மொழிபெயர்த்துரைக்கும் அவர்களின் திறனை அதிகரிக்கிறது. சுகாதாரம் அல்லது சட்டத் துறைகளில் உயர் நிபுணத்துவம் பெற்ற மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கு, NAATI சில மொழிகளில் சான்றளிக்கப்பட்ட சிறப்பு மொழிபெயர்த்துரைப்பாளர் தகுதிகளை வழங்குகிறது.

மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட இருமொழி பேசுபவர்கள்

திறன் பற்றாக்குறை

இருமொழி பேசும் ஒருவர் இரண்டு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராக இருக்கலாம், ஆனால் அவற்றுக்கிடையே அர்த்தத்தைப் பரிமாறிக்கொள்வதில் திறமையற்றவராக இருக்கலாம். அவர்களுக்குத் தெளிவுபடுத்த விளக்கம் கேட்கும் நம்பிக்கை இல்லாமலோ, அல்லது சிக்கலான தகவல்கள் இருக்கும்போது வேண்டப்படும் ஒரு முக்கியத் திறனான, குறிப்பெடுப்பதில் அனுபவம் இல்லாமலோ இருக்கலாம். முறையான அல்லது சிக்கலான சூழ்நிலைகளுக்குத் தேவையான சொற்களஞ்சியம் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

தவறான தகவல் பரிமாற்றத்தின் அபாயம்

சட்டம், மருத்துவம் அல்லது பிற நுண்ணிய உணர்வுப்பூர்வச் சூழ்நிலைகளில், பயிற்சி பெறாத இருமொழி பேசுபவர்களை மொழிபெயர்த்துரைக்கக் கேட்பது கடுமையான தவறுகளுக்கு வழிவகுக்கக்கூடும். தவறான நோய்க்குறியறிதல், சட்ட உரிமைகள் பற்றிய தவறான புரிதல்கள், ஒப்புதல் சிக்கல்கள் அல்லது இரகசியத்தன்மை மீறல்களுக்கு இவை வழிவகுக்கலாம்.

சோதிக்கப்படவில்லை

அவர்களின் மொழி மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் திறன்கள் சுயாதீனமாக மதிப்பிடப்படவில்லை.

குடும்ப உறுப்பினர்களை மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்துதல்

குடும்ப உறுப்பினர்களை மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்துவது கூடுதல் சிக்கல்களை உருவாக்குகிறது:

  • கலைச்சொற்கள் அறிதல் குறைபாடு காரணமாகவோ, அல்லது உணர்ச்சிபூர்வமான, கலாச்சார அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகத் தகவல்களைச் சேர்ப்பதாலோ அல்லது நீக்குவதாலோ அவர்கள் ஆபத்தான தவறுகளைச் செய்யக்கூடும்.
  • அவர்கள் நிகழ்வுகளைப் பற்றிய தங்கள் சொந்தக் கருத்தைக் கூறக்கூடும்.
  • சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தரங்கக் காரணங்களுக்காக அனைத்துத் தொடர்புடைய தகவல்களையும் பகிராமல் இருக்கலாம்.
  • இது குடும்ப உறுப்பினருக்கு மன அழுத்தத்தையும், மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும்

18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபரிடமும் மொழிபெயர்த்துரைக்குமாறு கேட்கக்கூடாது. ஒரு தொழில்முறைத் திறன் கொண்ட மொழிபெயர்த்துரைப்பாளரைப் பணியமர்த்துவது, குடும்பத்தினர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதிலும், கேள்விகளைக் கேட்பதிலும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

இருமொழி பேசுபவர்கள் சிறந்து விளங்கும் இடங்கள்

தகவல் தொடர்பு குறைந்த அபாயமுடையதாகவும், துல்லியத்தன்மை அவசியமில்லாததாகவும் இருக்கும்போது, ​​இருமொழி பேசுபவர்கள் ஒரு மதிப்புமிக்கப் பங்கை வகிக்கின்றனர். வரவேற்பாளர்கள், செவிலியர்கள், நிர்வாக அதிகாரிகள், சந்தைப்படுத்தல் தொழில்முறை வல்லுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மேலும் பல பணிகளில் இருமொழிப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இரண்டு மொழிகளைப் பேசும் அவர்களின் திறன் சமூகத் தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது.

சுகாதாரப் பராமரிப்பில், நோயாளியின் கலாச்சாரப் பின்னணியைப் பகிர்ந்து கொள்ளும் இருமொழிச் சுகாதாரப் பணியாளர்கள், கலாச்சாரத்திற்கு ஏற்ற பராமரிப்பை வழங்குவதில் ஓர் அத்தியாவசியமான பங்கை வகிக்கிறார்கள். இருப்பினும், பின்வரும் சமயங்களில் எப்போதும் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை ஈடுபடுத்துங்கள்:

  • ஒப்புதல் சம்பந்தப்பட்டிருக்கும்போது
  • நோய்க்குறியறிதல், சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த அல்லது உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலைகள் விவாதிக்கப்படும்போது.

கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் மற்றும் இருமொழி பேசும் நபர் ஆகியோருக்கிடையில் தேர்வு செய்யும்போது, ​​பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • நெறிமுறை சார்ந்த தாக்கங்கள் ஏதேனும் உள்ளனவா?
  • தவறான புரிதல்கள் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமா?
  • உரையாடல் அல்லது தகவல்கள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியதா?
  • நான் ஒப்புதல் வழங்க வேண்டுமா அல்லது பெற வேண்டுமா?
Was this page helpful?(தேவைப்படுகிறது)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.