மருத்துவ மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுதல்: சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கான ஒரு வழிகாட்டி
தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்குத் திறமையான தகவல் தொடர்பு அடிப்படையானது. குறைந்த ஆங்கிலப் புலமை கொண்ட நோயாளிகள் அல்லது காது கேளாதவர்களுக்கு, மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே துல்லியமான, மரியாதையான மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றங்களை உறுதி செய்வதில் தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் ஏன் பணியாற்ற வேண்டும்?
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஒரு நன்னெறிக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்கள், மேலும் இரகசியத்தன்மை, பாரபட்சமின்மை மற்றும் துல்லியம் உள்ளிட்ட நெறிமுறைத் தரங்களைக் கடைப்பிடிக்கப் பயிற்சி பெற்றவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது இருமொழிப் பணியாளர்களைப் போல் அல்லாமல், சிக்கலான மருத்துவக் கலைச்சொற்களையும், நுண்ணிய உணர்வு மிக்க கலந்துரையாடல்களையும் உணர்வுப்பூர்வ ஈடுபாடு இல்லாமல் கையாள்வதே அவர்களின் பணியாகும்.
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுவது என்பது:
- நோயாளியின் பாதுகாப்பையும், தகவலறிந்த ஒப்புதலையும் மேம்படுத்துகிறது
- மருத்துவ மற்றும் சட்டரீதியான அபாயங்களைக் குறைக்கிறது
- மருத்துவச் சிகிச்சைத் தவறுகளையும், தவறான புரிதல்களையும் குறைக்கிறது
- நோயாளியின் திருப்தியையும், சுகாதாரப் பலன்களையும் மேம்படுத்துகிறது
- சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உள்ள சட்டம் சார்ந்த மற்றும் நெறிமுறைக் கடமைகளை ஆதரிக்கிறது.
எப்போது ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை ஈடுபடுத்த வேண்டும்
பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை ஈடுபடுத்தவும்:
- நோயாளி ஒருவரைக் கோரும்போது
- நோயாளியின் ஆங்கிலப் புலமை குறைவாக இருக்கும்போது
- நோயாளி காது கேளாதவராக அல்லது செவித்திறன் குறைந்தவராக இருக்கும்போது
- ஒப்புதல் கோரும்போது உட்பட, சிக்கலான, நுண்ணிய உணர்வு மிக்க அல்லது சட்டரீதியான தகவல்கள் விவாதிக்கப்படும்போது.
ஒரு நோயாளி பொதுவாக ஆங்கிலத்தைப் புரிந்துகொள்பவராக இருந்தாலும் கூட, மன அழுத்தம் அல்லது அறிமுகமில்லாத சூழ்நிலைகள் போன்றவை அவர்களின் தகவல் தொடர்புகொள்ளும் ஆற்றல்களைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக மனநலம், ஒப்புதல் அல்லது நோய்க்குறியறிதல் தொடர்பான சூழ்நிலைகளில், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பயிற்சி பெறாத பணியாளர்கள் போன்றவர்களை நம்பியிருப்பதைத் தவிர்க்கவும்.
நினைவில் வைத்துக் கொள்ளவும்: மொழிபெயர்ப்பாளர் என்பவர் உரையாடலில் உள்ள அனைவருக்குமானவர், குறைந்த ஆங்கிலப் புலமை உள்ள நபருக்காக மட்டுமல்ல. நோயாளியுடன் உங்களால் நன்றாகத் தொடர்பு கொள்ள முடியாது என்ற கவலையுணர்வு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை அழைக்க வேண்டும்.
மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்தல்
பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் முன்பதிவு நடைமுறைகளை நிறுவியுள்ளன. உங்கள் நிறுவனத்தின் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்து, பொருத்தமான மொழிச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, முடிந்தவரை கூடிய விரைவில் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
சரியான மொழிபெயர்த்துரைத்தல் முறையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது உட்பட, மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த NAATI-இன் வழிகாட்டுதலைப் படியுங்கள்.
தேவையான தகவல்கள்
ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்ய, உங்களுக்குப் பின்வருவன தேவைப்படும்:
- நோயாளியின் பெயர் (சிறிய சமூகங்களில் நுண்ணிய உணர்வு மிக்க தலைப்புகள் தொடர்பான தனியுரிமையைக் கருத்தில் கொள்ளுங்கள்)
- தேவைப்படும் மொழி
- முன்பதிவின் தேதி, நேரம் மற்றும் கால அளவு
- சந்திப்பு ஏற்பாட்டின் வகை மற்றும் கலந்துரையாடலின் தன்மை
- முகவரி (பணியிடச் சேவைகளுக்கு)
- பணியாளரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள்
மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- மொழிபெயர்த்துரைப்பாளர் இல்லாத கலந்தாலோசனையை விட, மொழிபெயர்த்துரைப்பாளருடன் கூடிய கலந்தாலோசனைகள் அதிக நேரம் எடுக்கக்கூடும். முன்பதிவு நேரங்களில் இதைக் கருத்தில் கொள்ளவும்.
- நோயாளிகளிடம் அவர்களது மொழிபெயர்த்துரைப்பாளரின் பாலினம் குறித்த விருப்பங்களைப் பற்றிக் கேளுங்கள்.
- சில நோயாளிகள் தொடர்ந்து நடைபெறும் கலந்தாலோசனைகளுக்கு அதே மொழிபெயர்த்துரைப்பாளரை விரும்பலாம்.
அமர்வுக்கு முன்
மொழிபெயர்த்துரைப்பாளர் காத்திருப்பு ஏற்பாடுகள்
முடிந்தால், மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்காக நோயாளியிடமிருந்து தனியான, ஒரு குறிப்பிட்டக் காத்திருப்புப் பகுதியை வழங்குங்கள். இது தொழில்முறை எல்லைகளைப் பராமரிக்க உதவுகிறது, அத்துடன் கலந்தாலோசனைகளுக்கு முன்பு பணியாளர்கள் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்குச் சுருக்கமாக விளக்கமளிக்கக்கூடிய இடத்தையும் உருவாக்குகிறது.
மொழிபெயர்த்துரைப்பாளருக்குச் சுருக்கமாக விளக்கமளித்தல்
கலந்தாலோசனைக்கு முன்பு மொழிபெயர்த்துரைப்பாளரிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு சுருக்கமான விளக்கத்தை வழங்குங்கள். குறிப்பாக அந்த அமர்வில் நுண்ணிய உணர்வு மிக்க விஷயங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள், ஒரு முழுமையான விளக்கமளித்தலானது, மொழிபெயர்த்துரைப்பாளர் திறம்படக் கலந்தாலோசனை செய்யத் தயாராக இருப்பதற்கு உதவுகிறது. விளக்கமளித்தல் உட்பட, மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த NAATI-இன் வழிகாட்டுதலை இங்கே காண்க.
இருக்கை ஏற்பாடுகள்
நேரடிச் சந்திப்பு ஏற்பாடுகளுக்கு: நோயாளி, மொழிபெயர்த்துரைப்பாளர் மற்றும் மருத்துவ நிபுணர் ஒரு முக்கோணத்தை உருவாக்கும் வகையில் இருக்கைகளை அமைக்கவும். இது தெளிவான தகவல்தொடர்பை ஊக்குவிப்பதோடு, அனைவரும் சேர்க்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்கிறது.
ஆஸ்லான் மொழிபெயர்த்துரைத்தலுக்கு: மொழிபெயர்த்துரைப்பாளர், சுகாதாரப் பராமரிப்பு நிபுணருக்கு அருகிலும், நோயாளிக்கு எதிரிலும் அமரவோ அல்லது நிற்கவோ வேண்டும். இது காது கேளாத நோயாளிக்குப் பேசுபவருடன் கண் தொடர்பைப் பேணவும், உடல் மொழியைக் கவனிக்கவும் உதவுகிறது. நீண்டநேர அமர்வுகளுக்கு, இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மாறி மாறிப் பணியாற்றலாம்.
தொலைதூர மொழிபெயர்த்துரைத்தலுக்கு: உங்களிடம் தேவையான உபகரணங்கள் உள்ளனவா என்பதை உறுதிசெய்து, அவற்றை எவ்வாறு இயக்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தரைவழித் தொலைபேசி மற்றும் ஒலிபெருக்கித் தொலைபேசி வசதி இருந்தால், தொலைபேசி மொழிபெயர்த்துரைத்தல் மிகச் சிறப்பாகச் செயல்படும்.
அமர்வின் போது
சந்திப்பு ஏற்பாட்டைத் தொடங்குதல்
முதலில், உங்களையும் மொழிபெயர்த்துரைப்பாளரையும் நோயாளிக்கு அறிமுகப்படுத்துங்கள். மொழிபெயர்த்துரைப்பாளரின் பங்கை விளக்குங்கள்; அத்துடன் அவர்கள் தகவல் தொடர்புக்கு உதவுகிறார்கள் மற்றும் கூடுதல் தகவல்களைச் சேர்க்காமலோ அல்லது எதையம் விட்டுவிடாமலோ சொல்லப்பட்டதைத் துல்லியமாக அப்படியே மொழிபெயர்த்துரைக்கிறார்கள் என்பதையும் கூறவும். அமர்வின் நோக்கத்தை விளக்கி, எந்த நேரத்திலும் கேள்விகள் கேட்க நோயாளியை ஊக்குவிக்கவும்.
சந்திப்பை முடித்து வைத்தல்
புரிந்து கொண்டதை வலுப்படுத்த முக்கியக் குறிப்புகளைச் சுருக்கமாகக் கூறுங்கள். நோயாளி தகவலைப் புரிந்துகொண்டாரா என்பதைச் சரிபார்த்து, இறுதிக் கேள்விகளைக் கேட்க அழைக்கவும். தொழில்முறை எல்லைகளைப் பராமரிப்பதற்காக, மொழிபெயர்த்துரைப்பாளர் நோயாளியிடமிருந்து தனியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
அமர்விற்குப் பிறகு
குறிப்பாகச் சிக்கலான ஆலோசனைகளுக்குப் பிறகு, மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் கலந்தாலோசனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்குங்கள். இது ஏதேனும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கவும், பயனுள்ள ஒத்துழைப்பை ஆதரிக்கவும் அனுமதிக்கிறது. மொழிபெயர்த்துரைப்பாளரின் நடத்தை குறித்த கருத்துக்களை வழங்க அல்லது ஏதேனும் கவலைகளைத் தெரிவிக்க இது ஒரு பொருத்தமான நேரமுமாகும்.
கூடுதல் ஆதாரவளங்கள்
மேலதிக விவரங்களுக்குப் பின்வருவனவற்றைப் பார்வையிடவும்: