உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

This website will display in the language you choose.

பணிக்குச் சரியான தொழில்முறை நிபுணரைத் தேர்ந்தெடுத்தல்: NAATI நற்சான்றிதழ்களின் ஒரு கண்ணோட்டம்

Category நுகர்வோர் ஆதாரவளங்கள் வெளியிடப்பட்டது 30 January 2026

இந்தப் பக்கத்தில்


நீங்கள் ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்போது அல்லது வேறு மொழி பேசும் ஒருவருடன் தொடர்பு கொள்ளும்போது, ​​உங்களுக்கு உதவுவதற்குச் சரியான தொழில்முறை நிபுணரைக் கண்டறிவது முக்கியமாகும். மொழிபெயர்ப்பாளர்கள் எழுதப்பட்ட உரைகளுடன் பணியாற்றுகிறார்கள், அதேசமயம் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் வாய்மொழி அல்லது சைகை மொழித் தொடர்புகளுடன் பணியாற்றுகிறார்கள்.

NAATI-இன் சான்றிதழ் வழங்கும் அமைப்பில் மூன்று மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்களும், ஆறு மொழிபெயர்த்துரைப்பாளர் நற்சான்றிதழ்களும் அடங்கும். ஒவ்வொரு நற்சான்றிதழும் எதற்காகப் பயன்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

NAATI ஒவ்வொரு மொழிக்கும் அல்லது ஒவ்வொரு நிலைக்கும் தேர்வுச் சோதனைகளை வழங்குவதில்லை. உங்கள் மொழியில் தேர்வுச் சோதனை வசதி இல்லை என்றால், மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துரைப்பாளர்களும் தங்களுக்குத் தேவையான பயிற்சியும் மொழித் திறன்களும் உள்ளன என்பதைக் காட்டும் அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் நற்சான்றுதழைப் பெறலாம்.

ஒரே நற்சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கும்கூட வெவ்வேறு நிபுணத்துவத் துறைகள் இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நற்சான்றிதழ் பெற்ற தொழில்புரிவோர்களைத் தேடவும், அவர்களின் குறிப்பிட்ட அனுபவம் மற்றும் தகுதிகள் பற்றி மேலும் அறியவும் NAATI இணையத் தகவல் தொகுதியைப் பயன்படுத்தவும்.

NAATI-இன் சான்றிதழ் வழங்கும் அமைப்பு பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, NAATI இணையதளத்துக்குச் செல்லவும்

முன்நிபந்தனைத் தேவைகள்

NAATI-ஆல் சான்றளிக்கப்படுவதற்கு, அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களும் பல முன்நிபந்தனைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு நற்சான்றிதழுக்கும் அதற்கே உரிய முன்நிபந்தனைகள் உள்ளன (எடுத்துக்காட்டாக, பயிற்சியின் வெவ்வேறு நிலை தேவைப்படும்), ஆனால் அவை அனைத்திலும் பின்வருவன அடங்கும்:

  • மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தலில் முறையான பயிற்சி
  • ஆங்கிலம் அல்லது ஆஸ்லான் மொழித் தேர்ச்சி
  • நெறிமுறைத் திறன்: சான்றளிக்கப்பட்ட அனைத்து மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களும் கட்டுப்பட வேண்டிய, தேவையான நன்னெறிக் கோட்பாடு குறித்த அறிவும் புரிதலும்.
  • பன்முகக் கலாச்சாரத் திறன்: ஆஸ்திரேலிய சூழலில், கலாச்சாரங்களுக்கு இடையே பணியாற்றத் தேவையான அறிவும் திறனும்.

மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்கள்

வெவ்வேறு நிலையிலான திறனையும் அனுபவத்தையும் காட்டும் மூன்று மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்கள் உள்ளன.

மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள், சிக்கலான மற்றும் சிக்கலற்ற ஆவணங்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியும். ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பு துல்லியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அதை மதிப்பாய்வு செய்து திருத்தவும் அவர்களால் முடியும். மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே திசையில் அல்லது இரண்டு திசைகளில் பணியாற்றலாம்: எடுத்துக்காட்டாக, போலந்து மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மற்றும்/அல்லது ஆங்கிலத்திலிருந்து போலந்து மொழிக்கும்.

அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் மொழிபெயர்ப்பாளர்கள் NAATI-ஆல் தங்கள் திறன்களைச் சோதனை செய்யப்படவில்லை, ஆனால் குறைந்தபட்சப் பயிற்சி மற்றும் முன்நிபந்தனைத் தேவைகளைப் பூர்த்திசெய்து, சமீபத்திய, முறையான மொழிபெயர்த்தல் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். பொதுவாக, NAATI தேர்வுச் சோதனை கிடைக்காத மொழிகளில் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஒரு மொழிக்குச் சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இல்லாத பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் மொழிபெயர்ப்பாளர்கள் சான்றிதழ் பெற்ற ஒருவர் செய்யும் அதே வேலையைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்தபட்சப் பயிற்சி மற்றும் முன்நிபந்தனைத் தேவைகளை நிறைவு செய்துள்ளனர், மேலும் NAATI மூலம் அவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இது சான்றிதழ் அமைப்பின் கீழ் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ் ஆகும்.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • சிக்கலான ஆனால் சிறப்புத் திறன் தேவையில்லாத உரைகளின் மொழிபெயர்ப்பு
  • சிக்கலான ஆனால் சிறப்புத் திறன் தேவையில்லாத மொழிபெயர்ப்பின் திருத்தம்

சான்றளிக்கப்பட்ட உயர்நிலை மொழிபெயர்ப்பாளர்கள் முந்தைய NAATI அங்கீகார அமைப்பின் கீழ் (2018-க்கு முன்) ஒரு உயர் நற்சான்றிதழைப் பெற்றனர். இப்போது தேர்வுச் சோதனை வசதி கிடைப்பதில்லை, ஆனால் சில மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் இந்தத் நற்சான்றிதழை வைத்துள்ளனர்.

மொழிபெயர்த்துரைப்பாளர் நற்சான்றிதழ்கள்

சமூக மொழிபெயர்ப்பு மற்றும் கருத்தரங்கு மொழிபெயர்ப்பு ஆகிய இரண்டு முக்கிய சூழல்களில் ஆறு மொழிபெயர்த்துரைப்பாளர் நற்சான்றிதழ்கள் உள்ளன.

அங்கீகரிக்கப்பட்டத் தொழில்புரியும் மொழிபெயர்த்துரைப்பாளர்களின் திறன்கள் NAATI-ஆல் சோதிக்கப்படவில்லை, ஆனால் அவர்கள் குறைந்தபட்சப் பயிற்சி மற்றும் முன்நிபந்தனைகளை நிறைவுசெய்து, சமீபத்திய, முறையான மொழிபெயர்த்துரைத்தல் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். பொதுவாக, NAATI தேர்வுச் சோதனை கிடைக்காத மொழிகளில் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஒரு மொழிக்குச் சான்றிதழ் பெற்ற மொழிபெயர்த்துரைப்பாளர்கள் யாரும் இல்லாத பட்சத்தில், சான்றிதழ் பெற்ற ஒருவரின் அதே வேலையைச் செய்யுமாறு அவர்கள் கேட்கப்படலாம்.

சான்றளிக்கப்பட்டத் தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பொதுவாக இரண்டு நபர்களுக்கு இடையேயான, சிக்கலற்ற, பொதுவான உரையாடல்களுக்கான அவர்களின் மொழிபெயர்த்துரைப்புத் திறன்கள் சோதிக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் மட்டத்தில் சோதிக்கப்படும் பரந்த அளவிலான மொழிபெயர்த்துரைத்தல் திறன்களை NAATI மதிப்பிடாததால், ‘தற்காலிக’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • நேரடிப் பாத்திரமேற்பவர்களின் உதவியுடன், ஆங்கிலம் பேசுபவருக்கும், மற்றொரு மொழி பேசுபவருக்கும் இடையிலான நேருக்கு நேர் (அல்லது காணொளி) மற்றும் தொலைதூர (தொலைபேசி) உரையாடல்களை மொழிபெயர்த்துரைத்தல்.

சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில் சிக்கலான மொழிபெயர்த்துரைப்பைச் செய்ய முடியும். அவர்கள் NAATI-இன் சான்றளிக்கப்பட்ட தற்காலிக மொழிபெயர்த்துரைப்பாளர் தேர்வுச் சோதனையிலும், சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • இரு நபர்களுக்கு இடையேயான உரையாடல்களை மொழிபெயர்த்துரைத்தல்.
  • ஒரு மொழியிலிருந்து (எழுத்து வடிவில்) மற்றொரு மொழிக்கு (பேச்சு வடிவில்) ஆவணங்களைப் படித்து மொழிபெயர்த்தல்.
  • தனியுரைகளை மொழிபெயர்த்துரைத்தல் (தொடர்ச்சியான மற்றும் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்).

சான்றளிக்கப்பட்ட சிறப்புச் சுகாதார மொழிபெயர்த்துரைப்பாளர்கள் என்பவர்கள், சுகாதாரச் சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஆவர். அவர்கள் பொது மருத்துவ அறிவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் மொழிபெயர்த்துரைப்பாளர்களின் பங்கு குறித்த மருத்துவ அறிவுத் தேர்வுச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இதில் பேச்சு நோயியல் (speech pathology) தொடர்பான ஒரு கேள்வியும் அடங்கும். மேலும், நிபுணர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்களை (எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவர் மற்றொரு சுகாதாரத் தொழில்முறை நிபுணரிடம் ஒரு நோயாளி பற்றிப் பேசும்போது) மதிப்பீடு செய்யும் ஒரு மொழிபெயர்த்துரைப்புத் தேர்வுச் சோதனையிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், மேலும் அது மனநலச் சூழல்களில் மொழிபெயர்த்துரைக்கும் திறனை மதிப்பீடு செய்கிறது. இந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன்பு, அவர்கள் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைகளாகப் பணியாற்றிச் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • சுகாதார அறிவுச் சோதனை
  • ஒரு தனியுரையின் தொடர்ச்சியான மொழிபெயர்த்துரைத்தல்
  • மனநலச் சூழலில் ஒரு தனியுரையின் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்
  • ஒருமொழிப் பரிமாற்றத்தை மொழிபெயர்த்துரைத்தல் (சிக்கலான சூழலில் பல ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)

சான்றளிக்கப்பட்ட சிறப்புச் சட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் என்பவர்கள் சட்டம் சார்ந்த சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஆவர். அவர்கள் பொதுச் சட்ட அறிவு மற்றும் சட்டம் சார்ந்த சூழல்களில் மொழிபெயர்த்துரைப்பாளர்களின் பங்கு பற்றியச் சட்ட அறிவுத் தேர்வுச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (ஒரு நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் போன்ற) நிபுணர்களுக்கிடையேயான உரையாடல்களையும், நீதிமன்றக் குறுக்கு விசாரணைகளையும் மொழிபெயர்த்துரைப்பதை மதிப்பீடு செய்யும் ஒரு மொழிபெயர்த்துரைத்தல் தேர்விலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன்பு, அவர்கள் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பணியாற்றி, சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • சட்ட அறிவுச் சோதனை
  • உரையாடல் பகுதிகளைப் பிரித்தெடுக்கும் பணி (உருவகப்படுத்தப்பட்ட குறுக்கு விசாரணைச் சூழலில் தொடர்ச்சியான மொழிபெயர்த்துரைத்தல்)
  • தனியுரைகளைத் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துரைத்தல்
  • ஒருமொழிப் பரிமாற்றத்தை மொழிபெயர்த்துரைத்தல் (சிக்கலான சூழலில் பல ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)

சான்றளிக்கப்பட்ட கருத்தரங்கு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கல்விசார் கருத்தரங்குகள் போன்ற உயர்மட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு கருத்தரங்குச் சூழல்களில் மிகவும் சிக்கலான மற்றும் சிறப்பு வாய்ந்த செய்திகளை மொழிபெயர்த்துரைக்க முடியும். இந்த மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பொதுவாகக் கருத்தரங்கு மொழிபெயர்த்துரைத்தலில் சிறப்புப் பயிற்சியும், விரிவான அனுபவமும் பெற்றிருப்பார்கள். அவர்களின் நற்சான்றிதழ் ஒரு திசையில் மட்டுமே மாற்றுவதை உள்ளடக்கியது (எடுத்துக்காட்டாக, ஜப்பானியத்திலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லான்), இருப்பினும் சில மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பல மொழிச் சேர்க்கைகளைக் கொண்டுள்ளனர்.

NAATI-ஆல் மதிப்பீடு செய்யப்படும் பணிகள்
  • பார்க்கப்படாத பேச்சுகளின் தனியுரைகளை மொழிபெயர்த்துரைத்தல் (தொடர்ச்சியான மொழிபெயர்த்துரைத்தல்)
  • பார்க்கப்பட்ட மற்றும் பார்க்கப்படாத தனியுரைகளின் ‘பூத்’ மொழிபெயர்ப்பு (சமநேர மொழிபெயர்த்துரைத்தல்)
Was this page helpful?(தேவைப்படுகிறது)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.