தர உறுதிப்பாடு: மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்து சரிபார்ப்பது எப்படி
உங்களுக்குப் பேசத் தெரியாத மொழிகளில் மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கு நீங்கள்தான் பொறுப்பு எனும்போது, அது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். நல்வாய்ப்பாக, உங்களது மொழிபெயர்க்கப்பட்ட உட்பொருள் துல்லியமாகவும், தொழில்முறையாகவும், நோக்கத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் எடுக்கக்கூடிய நடைமுறைக்கு ஏற்ற தர உறுதிப்பாடு நடவடிக்கைகள் உள்ளன.
மொழி தெரியாமலேயே நீங்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தரச் சோதனைகள்
இலக்கு மொழியில் உங்களுக்குச் சரளமாகப் பேசத் தெரியாவிட்டாலும், நீங்கள் ஒரு காட்சி மற்றும் கட்டமைப்பு மதிப்பாய்வைச் செய்ய முடியும்:
உரையின் நீளத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும்
மொழிபெயர்க்கப்பட்ட உரை, அசல் உரையின் அதே நீளத்தில் உள்ளதா? சில மொழிகளுக்கு இயல்பாகவே அதிக அல்லது குறைவான சொற்கள் தேவைப்பட்டாலும், ஒரு பெரிய வித்தியாசம் இருப்பது விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட உட்பொருளைக் குறிக்கலாம்.
வடிவமைப்பைச் சரிபார்க்கவும்
பத்திகள், புள்ளிக் குறியீடுகள் ( bullet points) மற்றும் தலைப்புகளின் எண்ணிக்கை மூலப்பிரதியுடன் பொருந்துகிறதா? மொழிபெயர்க்கப்பட்ட உரை சரியான இடங்களில் தோன்றுகிறதா?
எண்கள் மற்றும் குறியீடுகளைச் சரிபார்க்கவும்
எண்கள் மூலப்பிரதியுடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். மேலும், குறியீடுகள் மற்றும் நிறுத்தற்குறிகளைச் சரிபார்க்கவும், அவற்றின் பயன்பாடு மொழிகளுக்கிடையே வேறுபடலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
தட்டச்சுப் பிழைகளைக் கண்டறியவும்
சதுர வடிவங்களுக்குள்ளே கேள்விக்குறிகள் போன்ற விசித்திரமான எழுத்துக்களையோ அல்லது தவறான இடத்தில் உள்ள குறியீடுகளையோ தேடிப் பார்க்கவும். இவை தொழில்நுட்ப அல்லது தட்டச்சுச் சிக்கல்களைக் குறிப்பிடலாம்.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
தரச் சிக்கல்கள் பெரும்பாலும் மோசமான நடைமுறைகள் அல்லது தொழில்முறைமைத் தன்மை இல்லாமையால் ஏற்படுகின்றன. இதோ சில எச்சரிக்கை அறிகுறிகள்:
தகுதியற்ற மொழிபெயர்ப்பாளர்கள்
எப்போதும் NAATI நற்சான்றிதழ்களை NAATI இணையதளம் மூலம் சரிபார்க்கவும். சான்றிதழ் அல்லது தொழில்முறை அனுபவம் இல்லாமை ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.
மோசமான தகவல் தொடர்பு
மொழிபெயர்ப்பாளர்கள் பதிலளிக்கக்கூடியவர்களாகவும், பின்னூட்டங்களை எதிர்கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். தற்காப்பு நடத்தை அல்லது மாற்றங்களைச் செய்ய மறுப்பது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
சந்தேகத்திற்குரிய காலக்கெடு
ஒரு மிகப்பெரிய வேலையை (எடுத்துக்காட்டாக 160,000 வார்த்தைகள்) 24 மணி நேரத்தில் முடிப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இது தரம் குறைந்த அல்லது திருத்தப்படாத இயந்திர மொழிபெயர்ப்பைக் குறிக்க வாய்ப்புள்ளது.
வழக்கத்திற்கு மாறான விலை நிர்ணயம்
நீங்கள் பெற்ற மற்ற விலைப்புள்ளிகளை விட எவ்வித விளக்கமும் இன்றி மிகக்குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ள கட்டணங்கள், மோசடிகள் அல்லது தரம் குறைந்த வேலையைக் குறிக்கலாம். உயர் மட்ட NAATI சான்றிதழ், விரிவான அனுபவம் அல்லது மேம்பட்ட தகுதிகள் காரணமாக அதிகக் கட்டணங்கள் என்பது நியாயப்படுத்தப்படலாம்.
வழங்குவதில் உள்ள சிக்கல்கள்
ஒப்புக்கொள்ளப்பட்ட வடிவத்திலும், மற்றும் குறித்த நேரத்திலும் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டதா? இல்லையெனில், தாமதங்கள் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டனவா?
அலங்கோலமான உரை
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ இலக்கு மொழியைப் படிக்க முடிந்தால், எழுத்துப்பிழை, இலக்கணம் மற்றும் இயல்பான ஓட்டத்தைச் சரிபார்க்கவும். ஒழுங்கற்ற சொற்றொடர்கள் மோசமான மொழிபெயர்ப்பைக் குறிக்கலாம்.
இரண்டாவது கருத்தை எப்போது கேட்பது
ஏதேனும் தவறாகத் தோன்றினால், மொழிபெயர்ப்பை மறு ஆய்வு செய்ய இரண்டாவது மொழிபெயர்ப்பாளரை அணுகவும்.
பின்வருவனவற்றுக்கு நீங்கள் எப்போதும் இரண்டாவது மீளாய்வைப் பெற வேண்டும்:
- சட்ட ஆவணங்கள்
- பொதுத் தகவல்தொடர்புகள்
- சுகாதாரத் தகவல்கள்
- பாதுகாப்புக் கையேடுகள்
- துல்லியமான தன்மை தேவைப்படும் எந்தவொரு உட்பொருளுக்கும்
- செயற்கை நுண்ணறிவு அல்லது இயந்திர மொழிபெயர்ப்புக் கருவிகளால் உருவாக்கப்பட்ட அல்லது உதவி பெறப்பட்ட மொழிபெயர்ப்புகள்.
முக்கியக் கருத்து
மேலோட்டமான சிக்கல்களை நீங்களே கண்டறிய முடியும் என்றாலும், ஒரு சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் மட்டுமே மொழிபெயர்ப்பானது துல்லியமாகவும், இயல்பாகவும், உங்கள் நோக்கத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய முடியும். சந்தேகம் ஏற்படும்போது, உறுதிப்படுத்திக்கொள்ள எப்போதும் இரண்டாவது மொழிபெயர்ப்பாளரை நாடுங்கள்.