அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இதன்படி வடிகட்டவும்:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
NAATI சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான ஒரு பொது இணையத் தகவல் தொகுதியை NAATI கொண்டுள்ளது. தங்களுக்குப் பணிபுரிய ஒரு சான்றளிக்கப்பட்ட நிபுணரைக் கண்டறிய சமூகத்திற்கு இது முக்கிய வழிகளில் ஒன்றாகும்.
தகவல் தொகுதியில் உள்ள தேடல் முடிவுகள், மிக உயர்ந்த நற்சான்றிதழ் தகுதிகளை முதலில் காட்டுகின்றன, பின்னர் பெயர்கள் சீரற்ற வரிசையில் தோன்றும், இதனால் எந்தவொரு தொழில்புரிவோருக்கும் மற்றவரை விட முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள், தகவல் தொகுதியில் தங்கள் பெயர்கள் இடம்பெற விருப்பம் தெரிவிக்கின்றனர். பட்டியலில் இடம்பெறாத தொழில்புரிவோர்களின் தொடர்பு விவரங்களை NAATI பகிர்வதில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கையாளுகிறார்கள். அவர்கள் எழுதப்பட்ட ஆவணங்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கிறார்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பேசப்படும் வார்த்தைகள் அல்லது சைகை மொழிகளைக் ('ஆஸ்லான்' போன்றவை) கையாளுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பேச்சாளரும் சொல்வதையோ அல்லது சைகை செய்வதையோ மற்றவரின் மொழிக்கு மொழிபெயர்க்கிறார்கள்.
மேலதிக வழிகாட்டுதலுக்கு, “மொழிபெயர்ப்பாளரா அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரா: எனக்கு யார் தேவை?” என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.
பல மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் எந்த இடத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரைத் தேடலாம்.
சில சந்திப்பு ஏற்பாடுகளுக்கு, மொழிபெயர்த்துரைப்பாளர் உங்களுடன் நேரில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். உங்களுக்கு நேருக்கு நேர் ஒருவர் தேவையா என்பது உங்கள் சூழ்நிலை, சேவையின் வகை மற்றும் அதற்கான கால அவகாசம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். உங்களுக்கு அருகிலுள்ளவர்களைக் கண்டறிய, NAATI இணையத் தகவல் தொகுதியில் இருந்து தொழில்புரிவோரை இருப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் தேடிப்பார்த்துத் தெரிவு செய்யலாம்.
NAATI என்பது மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையம் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசியத் தரநிலைகளை நிர்ணயித்து, அவற்றைத் தொடர்ந்து பேணுவதற்குப் பொறுப்பான ஓர் அமைப்பாகும்.
NAATI தொழில்புரிவோர்களுக்குச் சான்றளிக்கிறது, இதன் மூலம் அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமுதாயம் போன்றவை, இதன்மூலம் வழங்கப்படும் மொழிச் சேவைகள் துல்லியமானவை, தொழில்முறை சார்ந்தவை மற்றும் நெறிமுறையானவை என்று நம்பலாம்.
NAATI என்ன செய்கிறது:
NAATI மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களைச் தேர்வுசெய்து சான்றளிக்கிறது. இது மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தலுக்கான தேசியத் தரநிலைகளை நிர்ணயிக்கிறது, வெளியிடப்படும் சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர்களின் இணையவழி விவரப்பட்டியலைப் பராமரிக்கிறது, மேலும் மொழிச் சேவைத் துறையில் தரம் மற்றும் தொழில்முறைக்கு ஆதரவளிக்கிறது.
NAATI என்ன செய்வதில்லை:
NAATI மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தல் சேவைகளை வழங்குவதில்லை, மொழிபெயர்ப்பாளர்களையோ அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர்களையோ பணியமர்த்துவதில்லை, வேலைகளை ஒதுக்கிக் கொடுப்பதில்லை அல்லது முன்பதிவுகளை ஏற்பதில்லை, அல்லது சேவைகளுக்கான விலைகளையோ அல்லது கட்டணங்களையோ நிர்ணயிப்பதில்லை.
உங்களுக்கு ஒரு ஆவணத்தை மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் அல்லது ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் நேரடியாக NAATI-சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
அனைத்து மொழிபெயர்த்துரைப்பாளர்களும் இருமொழி பேசுபவர்கள்தான், ஆனால் இருமொழி பேசும் அனைவரும் மொழிபெயர்த்துரைப்பாளர்களாக இருக்க முடியாது.
- மொழிபெயர்த்துரைப்பாளர் என்பவர், இரு கலாச்சாரத் திறன்களைக் கொண்ட, இருமொழிகளில் பயிற்சி பெற்ற ஒரு தொழில்முறை நிபுணர் ஆவார், அவர் ஒரு நன்னெறிக் கோட்பாட்டிற்குக் கட்டுப்பட்டவர். ஆஸ்திரேலியாவில் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராகப் பணியாற்றுவதற்கான சமூகத் தரம், NAATI-ஆல் சான்றளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
- இருமொழி பேசுபவர் இரண்டு மொழிகளைப் பேசக்கூடியவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராகப் பயிற்சி பெற்றிருக்க மாட்டார் மற்றும் ஒரு நன்னெறிக் கோட்பாட்டிற்குக் கட்டுப்பட்டவராகவும் இருக்க மாட்டார்.
பின்வரும் எங்கள் கட்டுரையில் மேலதிகமாகப் படிக்கவும்: இருமொழி பேசுபவர் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்: என்ன வேறுபாடு?
NAATI-இன் சான்றிதழ் அமைப்பில், பேசப்படும் மொழிகளுக்கான மூன்று மொழிபெயர்ப்பாளர் நற்சான்றிதழ்களும், ஆறு மொழிபெயர்த்துரைப்பாளர் நற்சான்றிதழ்களும் அடங்கும். ஒவ்வொரு நற்சான்றிதழும் எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள உதவும் எங்கள் வழிகாட்டியைப் படியுங்கள்: பணிக்குச் சரியான தொழில்சார் வல்லுநரைத் தேர்ந்தெடுத்தல்: NAATI நற்சான்றிதழ்களின் ஒரு கண்ணோட்டம்
நீங்கள் காது கேளாத அல்லது செவித்திறன் குறைபாடு உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், நீங்கள் NAATI-சான்றளிக்கப்பட்ட ஆஸ்லான் அல்லது காது கேளாதோருக்கான மொழிபெயர்த்துரைப்பாளரையோ அல்லது எழுத்து வடிவிலான ஆங்கிலத்திலிருந்து ஆஸ்லானுக்கு மாற்றும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரையோ பணியமர்த்த வேண்டியிருக்கும். ஆஸ்லான் மற்றும் பிற சைகை மொழிகளுக்கான NAATI-யின் நற்சான்றிதழ்கள் குறித்த எங்கள் வழிகாட்டியை இங்கே படிக்கவும்.
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் நன்னெறிக் கோட்பாடு மற்றும் நடத்தைக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது கணக்காளர் மீது வைக்கும் நம்பிக்கையைப் போலவே, NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட எந்தவொரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரையும் நம்பலாம்.
எங்கள் கட்டுரையில் மேலும் படிக்கவும்: நன்னெறிக் கோட்பாட்டுக்கான விளக்கவுரை