நன்னெறிக் கோட்பாட்டுக்கான விளக்கவுரை
இந்தப் பக்கத்தில்
- மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் நெறிமுறைகள்
- நன்னெறிக் கோட்பாடு
- நன்னெறிக் கோட்பாட்டின் விதிமீறல்கள்
மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் நெறிமுறைகள்
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் நன்னெறிக் கோட்பாடு மற்றும் நடத்தைக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது கணக்காளர் மீது வைக்கும் நம்பிக்கையைப் போலவே, NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட எந்தவொரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரையும் நம்பலாம்.
அவர்களுக்கான கடமை:
- துல்லியமாக இருத்தல்
- பாரபட்சமின்றியும், ஒருதலைப்பட்சமின்றியும் இருத்தல்
- உங்கள் தகவல்களை இரகசியமாக வைத்திருத்தல்
- தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டின் மூலம் தங்கள் திறன்களைப் பராமரித்தல்
- பயிற்சி அல்லது நற்சான்றிதழ்கள் மூலம் தாங்கள் தகுதி பெற்ற பணிகளை மட்டுமே செய்தல்
நெறிமுறைச் சிக்கல்கள் என்பவை, தொழில்முறைச் சூழ்நிலைகளில் ஏற்படும் பிரச்சினைகளாகும், இவற்றுக்குத் தெளிவான சரி அல்லது தவறு என்ற தீர்வு இருப்பதில்லை. மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கு, அவர்களின் பணியில் ஏற்படக்கூடிய சில நெறிமுறை சார்ந்த சிக்கல்கள் இங்கே தரப்பட்டுள்ளன:
- வாடிக்கையாளர் ஒருவர் காவல்துறையினர் முன்னிலையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். காவல்துறையினரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது முறையற்றது என்று மொழிபெயர்த்துரைப்பாளர் நினைக்கலாம் அல்லது அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்த வாடிக்கையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்கலாம். இருப்பினும், நன்னெறிக் கோட்பாடு, மொழிபெயர்த்துரைப்பாளரைத் துல்லியமாகவும், பாரபட்சமின்றியும் இருக்குமாறு வழிநடத்துகிறது. மேலும், தகாத வார்த்தைகள் உட்பட அனைத்தும் காவல்துறையினருக்கு மொழிபெயர்த்துரைக்கப்பட வேண்டும், அதுபோலவே, அதன் மறுமொழியும் மொழிபெயர்த்துரைக்கப்பட வேண்டும்.
- யாராவது பொய் சொல்லுவதாக அவர்கள் நினைக்கிறார்களா என்பது போன்ற ஒரு கருத்தை வழங்குமாறு கேட்கப்படுவது. நன்னெறிக் கோட்பாடு, மொழிபெயர்த்துரைப்பாளரை பாரபட்சமின்றி இருக்கவும், அவர்களின் எல்லைகளைத் தெளிவுபடுத்தவும் வழிநடத்துகிறது: அவர்கள் தங்களின் மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தலின் ஒரு பகுதியாகப் பரிந்துரைத்தல், வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.
- தங்கள் வாடிக்கையாளர் முந்தைய சந்திப்பு அல்லது சந்திப்பு ஏற்பாட்டில் தெரிவித்த ஏதாவது ஒன்றை மீண்டும் கூறினாரா என்று கேட்கப்படுவது. நன்னெறிக் கோட்பாடு, மொழிபெயர்த்துரைப்பாளரைத் தகவல்களை இரகசியமாக வைத்திருக்குமாறு வழிநடத்துகிறது. நோயாளி முந்தைய சந்திப்பு ஏற்பாட்டில் அதே தகவலைக் கூறினாரா என்று ஒரு மருத்துவர் மொழிபெயர்த்துரைப்பாளரிடம் கேட்டாலும், அவர்களால் அந்தத் தகவலை வழங்க முடியாது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், பொருத்தமான நான்கு நன்னெறிக் கோட்பாடுகள் உள்ளன: AUSIT, ASLITA, NZSTI மற்றும் SLIANZ.
- AUSIT (ஆஸ்திரேலிய மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் நிறுவனம்) நன்னெறிக் கோட்பாடு மற்றும் நடத்தைக் கோட்பாடு (2012): பேசப்படும் மொழிகளில் பணிபுரியும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த அனைத்து மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள்
- AUSIT மற்றும் NZSTI போன்றவை ஒரு பொதுவான நன்னெறிக் கோட்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதைக் கவனிக்கவும். நீங்கள் NZSTI நன்னெறிக் கோட்பாட்டை இங்கே படிக்கலாம்
- ASLIA (ஆஸ்திரேலிய சைகை மொழி மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சங்கம்) நன்னெறிக் கோட்பாடு மற்றும் தொழில்முறை நடத்தைக்கான வழிகாட்டுதல்கள் (2007): அனைத்து ஆஸ்லான் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள்
- SLIANZ (நியூசிலாந்து சைகை மொழி மொழிபெயர்த்துரைப்பாளர்கள்) நன்னெறிக் கோட்பாடு மற்றும் நடத்தைக் கோட்பாடு (2012): NZSL-இல் பணிபுரியும் நியூசிலாந்தைச் சேர்ந்த அனைத்து மொழிபெயர்த்துரைப்பாளர்கள்
NAATI சான்றிதழ் பெறுவதில், தொடர்புடைய நன்னெறிக் கோட்பாடு குறித்த அறிவையும் புரிதலையும் வெளிப்படுத்துவதும் அடங்கும். மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் நன்னெறிக் கோட்பாட்டையும், அதன் கோட்பாடுகள் அவர்களின் பணிக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பதையும், நெறிமுறை சார்ந்த சிக்கல்களுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளிப்பது என்பதை அறிந்திருப்பதையும் NAATI உறுதி செய்கிறது.
பல்வேறு நன்னெறிக் கோட்பாடுகள் மற்றும் NAATI-இன் நெறிமுறைத் திறன் சோதனை பற்றி இங்கே மேலும் படிக்கவும்
நன்னெறிக் கோட்பாட்டின் விதிமீறல்கள்
சில சமயங்களில், ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் கோட்பாடுகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு வாடிக்கையாளர், அவர்களின் வேலை வழங்குநர் அல்லது சக தொழில்புரிவோருக்குச் சேதம் அல்லது தீங்கு ஏற்படுகிறது. இது பொதுவாக ‘விதிமீறல்’ என்று குறிப்பிடப்படுகிறது.
NAATI, AUSIT, ASLITA, NZSTI மற்றும் SLIANZ ஆகியவை நன்னெறிக் கோட்பாட்டின் சாத்தியமான விதிமீறல்களைத் பாரதூரமாக எடுத்துக்கொள்கின்றன. NAATI-இடம் புகாரளிக்கப்பட்ட எந்தவொரு விதிமீறல்களையும் NAATI எவ்வாறு விசாரித்து பதிலளிக்கும் என்பது குறித்த ஆலோசனைக்கு, நீங்கள் NAATI-இன் புகார்கள் கொள்கையைப் படிக்கலாம். நீங்கள் நேரடியாக மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரிடமோ, அவர்களின் வேலை வழங்குநரிடமோ, அல்லது அவர்கள் உறுப்பினராக இருந்தால் அவர்களின் தொழில்முறை சங்கத்திடமோ (AUSIT, ASLITA, NZSTI அல்லது SLIANZ) புகார் அளிக்கலாம்.