நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்படத் தகுதியானவர்கள்.
NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேளுங்கள்.
பிரச்சினை
பாதுகாப்பான, தரமான சுகாதாரப் பராமரிப்பிற்குத் தெளிவான தகவல் தொடர்பு இன்றியமையாதது. இது மக்கள் தங்கள் உடல்நலத்தைப் புரிந்துகொள்ளவும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெறவும் உதவுகிறது.
ஒரு சுகாதாரப் பராமரிப்புத் தொழில்முறை வல்லுநருக்கும், நோயாளிக்கும் இடையிலான மொழித் தடைகள், சுகாதார சேவைகளைக் குழப்பமானதாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ மாற்றக்கூடும். முக்கியமான தகவல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் அல்லது கவனிக்கப்படாமல் போகலாம், இது கேள்விகளைக் கேட்பதையும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதையும், அல்லது சிகிச்சை முடிவுகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதையும் கடினமாக்குகிறது. இது தவறுகளுக்கும், நியாயமற்ற சுகாதார விளைவுகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.
மொழிபெயர்த்துரைத்தலுக்காகக் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது பயிற்சி பெறாத இருமொழிப் பணியாளர்களையோ சார்ந்திருப்பது மக்களை அபாயத்தில் ஆழ்த்தக்கூடும். தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம், தனிப்பட்ட விவரங்கள் பகிரப்படலாம், மேலும் நுண்ணிய உணர்வுப்பூர்வ உரையாடல்கள் கடினமானதாகவோ அல்லது அசவுகரியமானதாகவோ மாறக்கூடும்.
NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சுகாதாரப் பராமரிப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற உதவுகிறார்கள். நோயாளிகளுக்கும், சுகாதாரத் தொழில்முறை வல்லுநர்களுக்கும் இடையே தெளிவான, துல்லியமான மற்றும் இரகசியமான தகவல் தொடர்புக்கு அவர்கள் ஆதரவளிக்கிறார்கள், இதன் மூலம் அனைவரும் புரிந்துகொள்ளவும், மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படவும் முடியும்.
சமத்துவமான சுகாதாரப் பராமரிப்புக்காகச் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள்
‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்படத் தகுதியானவர்கள்’ என்பது சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுவதை ஊக்குவிக்கும் ஒரு தேசிய NAATI விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும். இது நோயாளிகளை மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரைக் கோருமாறு ஊக்குவிக்கிறது, மேலும் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு ஆதரவளிக்கிறது.
இந்தப் பிரச்சாரம், பின்வருவனவற்றை ஆதரிப்பதில் NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது:
- மருத்துவப் பாதுகாப்பு மற்றும் தகவலறிந்த ஒப்புதல்
- நோயாளியின் கண்ணியம் மற்றும் தன்னுரிமை
- சுகாதாரச் சேவைகளுக்கான சமமான அணுகல்
இந்தப் பிரச்சாரம் பின்வருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- ஆங்கிலம் குறைந்த அளவே பேசத்தெரிந்த, அல்லது பேசவே தெரியாத சமூக உறுப்பினர்கள்
- குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட வயதுவந்த செல்வாக்குள்ளவர்கள்
- முதன்மை மற்றும் சமூகப் பராமரிப்பு அமைப்புகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்
‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்பட தகுதியானவர்கள்’ என்பது தேசிய மற்றும் சமூக அடிப்படையிலான வழித்தடங்கள் மூலம் கொண்டுசேர்க்கப்படுகிறது, அவற்றுள் அடங்குபவை:
- வெளிப்புற விளம்பரங்கள்
- தொலைக்காட்சி மற்றும் வானொலி
- எண்ம (digital) மற்றும் சமூகத் தளங்கள்
- இந்த இணையதளத்தில் மையமாக அமைந்துள்ள சமூக ஆதாரவளங்கள்.
NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் தொழில்முறை மொழிச் சேவைகளை எவ்வாறு பெறுவது என்பதை நோயாளிகளுக்கும் சேவைகளுக்கும் புரியவைக்கப் பிரச்சாரப் பொருட்கள் நடைமுறைத் தகவல்களுடன் ஆதரிக்கப்படுகின்றன.
பிரச்சாரத் தொலைக்காட்சி விளம்பரம் (60 வினாடிகள்)
SBS In Language உடன் இணைந்து வழங்கும் ‘நாம் அனைவரும் புரிந்துகொள்ளப்பட தகுதியானவர்கள்’ தொலைக்காட்சி விளம்பரம்.
மொழியில் வசனவரிகள் சேர்க்கப்பட்டத் தொலைக்காட்சி விளம்பரம்
NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளருடன் ஏன் பணியாற்ற வேண்டும்?
NAATI சான்றிதழ் என்பது ஆஸ்திரேலியாவில் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளராகப் பணியாற்றுவதற்கான சமூகத் தரநிலை ஆகும். NAATI மூலம் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார் என்பதன் பொருள் என்னவென்றால்:
- அவரது திறன்களும் தகுதிகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன
- ஆங்கிலத்திலும் அவரது பிற மொழியிலும் சரளமாகப் பேசுகிறார்
- ஒரு நன்னெறிக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்.
NAATI சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்களைப் பணியமர்த்துவது என்பது பாதுகாப்பான, நெறிமுறையான மற்றும் உயர்தரமான சுகாதாரச் சேவையை வழங்க உதவுகிறது, ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலையைத் தொழில்முறையாகச் செய்வார்கள் என்று நீங்கள் நம்பலாம்.
ஒரு சான்றிதழ் பெற்ற மொழிபெயர்த்துரைப்பாளரைக் கண்டறியுங்கள்
அரசு அல்லது சுகாதார சேவையைப் பெற உங்களுக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்படும்போது, உங்களுக்காக ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு அந்தச் சேவையிடம் நீங்கள் கோரலாம். நீங்கள் முன்பதிவு அல்லது சந்திப்பு ஏற்பாடு செய்யும்போது, ‘எனக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவை’ என்று கூறி, அவர்களிடம் உங்கள் மொழியைத் தெரிவிக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் மொழிபெயர்த்துரைப்பாளர் இருப்பது உங்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்குமென்றால், அதையும் நீங்கள் கேட்கலாம். ஆஸ்திரேலியாவில் அரசு அல்லது சுகாதாரச் சேவைகளை அணுகும் நோயாளிகளுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பொதுவாக இலவசமாகக் கிடைக்கின்றனர். ஒரு செயல் திட்டம் அல்லது வர்த்தகர் கூட்டத்திற்கு ஆதரவளிக்க ஒரு தனியார் மொழிபெயர்த்துரைப்பாளரை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், NAATI-இன் இணையத் தகவல் தொகுதி மூலம் ஒருவரை நீங்கள் கண்டறியலாம். மொழிச் சேவைகளை வழங்கும், NAATI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உட்பட, பல்வேறு மொழிகள், இடங்கள் மற்றும் சேவை வகைகளில் உள்ள தகுதிவாய்ந்த தொழில்முறை வல்லுநர்களைக் கண்டறிய இது உதவும்.
தகவல் தொகுதியைப் பார்வையிடவும்