ஒரு மொழிபெயர்த்துரைப்பாளருடன் எவ்வாறு பணியாற்றுவது
இந்தப் பக்கத்தில்
ஒரு மொழிபெயர்த்துரைப்பாளருடன் பணியாற்றுவது என்பது உங்களின் மொழியிலிருந்து வேறுபட்ட மொழியைப் பேசும் மக்களுடன் திறம்படத் தொடர்புகொள்ள உதவுகிறது. மொழிபெயர்த்துரைப்பாளர்கள் உரையாடலில் பங்கேற்பவர்கள் அல்ல; அவர்கள் ஒரு பாலம்தான்.
NAATI-ஆல் சான்றளிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர்:
- தங்களுக்கு வழங்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் தலைப்பை ஆய்வு செய்து, பணிக்குத் தயாராவார்
- அனைத்தையும் துல்லியமாகவும் பாரபட்சமின்றியும் மொழிபெயர்த்துரைப்பார்
- தகவல்களைச் சேர்க்கவோ, நீக்கவோ, அல்லது மாற்றவோ மாட்டார், மேலும் கருத்துகள், ஆலோசனைகள் அல்லது விளக்கங்களை வழங்க மாட்டார்
- துல்லியத்தை உறுதிசெய்வதற்காகத் தேவைப்பட்டால், தெளிவுபடுத்தும்படியோ அல்லது திருப்பிக் கூறும்படியோ கேட்பார்
- ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கிடும் சூழ்நிலைகளைக் கையாளுவார்
- அமர்வின் போது விவாதிக்கப்பட்ட அனைத்தும் உட்பட, பணி தொடர்பான எல்லாத் தகவல்களையும் இரகசியமாக வைத்திருப்பார்.
அவர்களை மரியாதையுடன் நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு தொழில்முறை அனுபவத்தை உறுதிசெய்ய இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்.
அமர்வுக்கு முன்
சரியான மொழிபெயர்த்துரைக்கும் முறையையும், இடத்தையும் தேர்வு செய்யவும்
ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்யும்போது, எந்த முறை பயன்படுத்தப்படும் என்பதையும், மொழிபெயர்த்துரைப்பாளர் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், மேலும் பொருத்தமான உபகரணங்கள் உள்ளனவா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெளிவாகத் தெரியாத பட்சத்தில், உங்கள் மொழிச் சேவை வழங்குநர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் சிறந்த அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
மொழிபெயர்த்துரைக்கும் முறை
தொடர்ச்சியான மொழிபெயர்த்துரைத்தல்: பேச்சாளர் என்ன பேசினார் என்பதை மொழிபெயர்த்துரைப்பதற்கு முன், அவர் இடையில் நிறுத்தும் வரை மொழிபெயர்த்துரைப்பாளர் காத்திருப்பார். இந்த முறையானது பொதுவாகச் சந்திப்பு ஏற்பாடுகள் அல்லது சிறிய சந்திப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமர்வு, ஒரே மொழியில் நடக்கும் உரையாடலை விட சுமார் இரண்டு மடங்கு அதிக நேரம் எடுக்கும், எனவே உங்கள் அட்டவணையில் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள்.
சமநேர மொழிபெயர்த்துரைத்தல்: மொழிபெயர்த்துரைப்பாளர், தலையில் அணியும் ஒலிவாங்கிகள் (headsets) அல்லது மொழிபெயர்த்துரைத்தல் அறைகள் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்பார். தகவல் பரிமாற்றம் தடையின்றித் தொடர வேண்டிய பெரிய கூட்டங்கள், கருத்தரங்குகள் அல்லது குழு விவாதங்களுக்கு இந்த முறை மிகவும் பொருத்தமானது. இது மனரீதியாக சவாலான வேலை என்பதால், துல்லியத்தைப் பராமரிக்கவும் சோர்வைத் தவிர்க்கவும், மாறி மாறிப் பணியாற்றக்கூடிய குறைந்தது இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்களைக் கொண்டிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
மொழிபெயர்த்துரைத்தலை வழங்குதல்
நேருக்கு நேர் (நிகழ்விடத்தில் அல்லது நேரில்): நேருக்கு நேர் மொழிபெயர்த்துரைத்தல் சிக்கலான சூழ்நிலைகளுக்கு மிகவும் சிறந்தது, ஏனென்றால் இது உடல் மொழி போன்ற சொற்களற்ற சைகைகளைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் மொழிபெயர்த்துரைப்பாளர் உங்களுடன் ஒரே அறையில் இருப்பார். கிராமப்புற அல்லது பிராந்தியப் பகுதிகளிலும், அத்துடன் சில மொழிகளிலும் இது குறைவாகவே கிடைக்கக்கூடும்.
காணொளி: காணொளிவழி மொழிபெயர்த்துரைத்தல், நேருக்கு நேர் மொழிபெயர்த்துரைத்தலுக்கு அடுத்த மிகச்சிறந்த தேர்வாகும், ஏனென்றால் இதில் பங்கேற்பாளர்களின் சொற்களற்ற சைகைகளையும் அவர்கள் காண முடியும். நிகழ்விடத்தில் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் கிடைக்காதபோது, குறிப்பாக குறுகிய கால முன்பதிவுகள் அல்லது எளிதில் கிடைக்காத மொழிகளுக்குக் காணொளி மொழிபெயர்த்துரைத்தல் பயனுள்ளதாக இருக்கும். காணொளி மொழிபெயர்த்துரைத்தலானது ‘ஆஸ்லான்’ (Auslan) மற்றும் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்றது, ஆனால் இதற்கு நம்பகமான இணைய இணைப்பு மற்றும் சரியான உபகரணங்கள் தேவைப்படும்.
தொலைபேசி: தொலைபேசிவழி மொழிபெயர்த்துரைத்தல் என்பது மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய மொழிபெயர்த்துரைத்தல் முறையாகும். இது குறுகிய, சிக்கலற்ற தகவல்தொடர்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரியான மொழிபெயர்த்துரைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும்
- மொழிபெயர்த்துரைப்பாளர் NAATI சான்றளிக்கப்பட்டவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் எண்ணைப் (CPN) பயன்படுத்தி நீங்கள் NAATI சான்றிதழைச் சரிபார்க்கலாம்.
- வசதியாக இருப்பதாக உணர்ந்தாலும், குடும்ப உறுப்பினர்களையோ நண்பர்களையோ மொழிபெயர்த்துரைப்பாளர்களாகப் பயன்படுத்த வேண்டாம். அவர்களிடம் நடுநிலைமை, பயிற்சி அல்லது மொழித் திறன்கள் இல்லாமல் இருக்கலாம். இது இரகசியத்தன்மை, துல்லியம் மற்றும் தொழில்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
- மொழிபெயர்த்துரைப்பாளர் பணியின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்த மொழிபெயர்த்துரைப்பாளர் தேவையா? சுகாதாரம் அல்லது சட்டம் போன்ற ஒரு குறிப்பிட்ட தளத்தில் அவர்களுக்கு நிபுணத்துவம் இருக்க வேண்டுமா?
மொழிபெயர்த்துரைப்பாளருக்கு விளக்கமளித்தல்
முடிந்தவரை, பணிக்கு முன்பாக மொழிபெயர்த்துரைப்பாளருக்கு ஒரு விளக்கத்தை அளிக்கவும். விளக்கமளித்தல் என்பது, சந்திப்பின் நோக்கம், யார் கலந்துகொள்வார்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் ஆகியவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்வதாகும். மொழிபெயர்த்துரைப்பாளருடன் முன்கூட்டியே ஒரு சுருக்கமான உரையாடல் கூட, குறைவான குறுக்கீடுகளுக்கும், சுமுகமான தகவல் தொடர்புக்கும் வழிவகுக்கும்.
விளக்கமளித்தலில் பின்வருவன அடங்கும்:
- தலைப்பு, இலக்குகள் மற்றும் பங்கேற்பாளர்கள் பற்றிய பின்னணித் தகவல்களை வழங்குதல்.
- மொழிபெயர்த்துரைப்பாளர் துல்லியமாக மொழிபெயர்த்துரைக்கத் தயாராவதற்காக, ஏதேனும் தொழில்நுட்பம் சார்ந்த மொழி, சிறப்புக் கலைச்சொற்கள் அல்லது குறிப்பிட்ட வழக்குமொழிச் சொற்கள் இருந்தால் அவற்றைத் தெரியப்படுத்துதல்.
- சந்திப்பானது உணர்ச்சிப்பூர்வமானதா, தொழில்நுட்பம் சார்ந்ததா அல்லது நுண்ணிய உணர்வு கொண்டதா என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துதல்.
பணி சிக்கலானதாக இருந்தால், மொழிபெயர்த்துரைப்பாளர் தயாராவதற்கும், முடிந்தால் ஆய்வு செய்வதற்கும் போதுமான அவகாசம் கொடுங்கள். இந்தத் தயாரிப்பு, துல்லியமான மொழிபெயர்த்துரைத்தலை உறுதிசெய்ய உதவுகிறது, அத்துடன் அமர்வின் போது மொழிபெயர்த்துரைப்பாளரின் பணிச்சுமையையும் குறைக்கிறது.
செயல்முறை ஏற்பாடுகளைத் திட்டமிடுங்கள்
நேருக்கு நேர் மொழிபெயர்த்துரைப்பில், நீங்களும், மொழிபெயர்த்துரைப்பாளரும், வாடிக்கையாளரும் உடல்ரீதியாக ஒரே இடத்தில் இருக்க வேண்டும். நோயாளி, மொழிபெயர்த்துரைப்பாளர் மற்றும் மருத்துவர் ஒரு முக்கோணத்தை உருவாக்கும் வகையில் இருக்கைகளை ஒழுங்கமைக்கவும். இது தெளிவான தகவல்தொடர்பை ஊக்குவிக்கிறது மற்றும் அனைவரும் அடங்கியிருப்பதை உறுதி செய்கிறது.
ஆஸ்லான் மொழிபெயர்த்துரைப்பிற்கு: மொழிபெயர்த்துரைப்பாளர், சுகாதார நிபுணருக்கு அருகிலும், நோயாளிக்கு எதிரிலும் அமர வேண்டும் அல்லது நிற்க வேண்டும். இது காது கேளாத நோயாளி, பேசுபவருடன் கண் தொடர்பைப் பேணவும், உடல் மொழியைக் கவனிக்கவும் உதவுகிறது. நீண்ட நேர அமர்வுகளுக்கு, இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மாறி மாறிப் பணியாற்றலாம்.
தொலைபேசி மற்றும் காணொளிவழிக் கலந்துரையாடல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன—மொழிபெயர்த்துரைப்பாளர் அல்லது வாடிக்கையாளர் உங்களுடன் இருக்கலாம், அல்லது ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில் இருக்கலாம். அமர்வு தொடங்குவதற்கு முன் தொழில்நுட்பம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மொழிபெயர்த்துரைப்பிற்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மொழியில் பேசுவதை விட உரையாடல்கள் அதிக நேரம் எடுக்கும்.
அமர்வின் போது
என்ன செய்ய வேண்டும்
- மொழிபெயர்த்துரைப்பாளரை மற்றும் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இது போன்ற ஒரு எளிய வாக்கியத்துடன் தொடங்கலாம்: “இவர் நமது மொழிபெயர்த்துரைப்பாளர், இன்று நாம் தொடர்பு கொள்ளுவதற்கு இவர் உதவுவார். நாம் சொல்லும் அனைத்தும் துல்லியமாகவும் இரகசியமாகவும் மொழிபெயர்த்துரைக்கப்படும்.” மொழிபெயர்த்துரைப்பாளர் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இயல்பான உரையாடல் தடையின்றித் தொடர, மொழிபெயர்த்துரைப்பாளர் தன்மையில் (அதாவது, “நான்”, “நாம்”) பேசுவார் என்பதைப் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டுங்கள்.
- மொழிபெயர்த்துரைப்பாளரிடம் பேசாமல், மற்ற நபரிடம் நேரடியாகப் பேசுங்கள். “இன்று நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேளுங்கள், “அவள் எப்படியிருக்கிறாள் என்று கேளுங்கள்” என்று கேட்காதீர்கள். கலாச்சார ரீதியாகப் பொருத்தமற்றதாக இல்லாத பட்சத்தில், மற்ற நபருடன் கண் தொடர்பைப் பேணுங்கள்.
- தெளிவான, எளிய மொழியைப் பயன்படுத்துங்கள். கொச்சை வார்த்தைகள், வழக்குமொழிச் சொற்கள், சுருக்கப் பெயர்கள் அல்லது சிக்கலான ஒப்பீடுகளைத் தவிர்க்கவும். மொழிபெயர்த்துரைத்தலுக்கு நேரம் ஒதுக்குவதற்காக அவ்வப்போது இடைநிறுத்தம் செய்யவும்.
- மொழிபெயர்த்துரைப்பாளர் பேசி முடிக்கும் வரைக் காத்திருந்து அதன்பின் தொடரவும். இது துல்லியத்தை உறுதி செய்வதோடு, அதிகப்படியான தகவல் சுமையையும் தடுக்கிறது.
- பொறுமையாக இருங்கள். சில மொழிகளில் ஒரே பொருளை வெளிப்படுத்தக் கூடுதலான அல்லது குறைவான சொற்கள் தேவைப்படலாம். மொழிபெயர்த்துரைத்தலின் போது ஏற்படும் சில மௌனங்கள் இயல்பானவையாகும்.
- தேவைக்கேற்ப தெளிவுபடுத்தவும். ஏதேனும் தெளிவாகப் புரியவில்லை என்றால், மொழிபெயர்த்துரைப்பாளரிடம் திரும்பவும் கூறும்படியோ அல்லது விளக்கும்படியோ கேளுங்கள். ஏதேனும் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றால், தயங்காமல் பேசுவதற்கு மொழிபெயர்த்துரைப்பாளரை ஊக்குவிக்கவும். மொழிபெயர்த்துரைப்பாளருக்கு விளக்கம் தேவைப்பட்டால், அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை மற்றவரிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள்.
தவிர்க்க வேண்டியவை
- மொழிபெயர்த்துரைப்பாளரையோ அல்லது மற்றவரையோ வாக்கியத்தின் நடுவில் குறுக்கீடு செய்யாதீர்கள். குறுக்கீடுகள் குழப்பத்திற்கோ அல்லது தவறான புரிதலுக்கோ வழிவகுக்கும்.
- மொழிபெயர்த்துரைப்பாளரிடம் கருத்துக்களையோ ஆலோசனைகளையோ கேட்காதீர்கள். அவர்களின் பங்கு மொழிபெயர்த்துரைப்பது மட்டுமே, மத்தியஸ்தம் செய்வதோ, பரிந்துரைப்பதோ அல்லது தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதோ அல்ல.
- மொழிபெயர்த்துரைப்பாளருடன் பக்க உரையாடல்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மொழிபெயர்த்துரைப்பாளர் மொழிபெயர்த்துரைப்பார், எனவே மற்ற மொழியில் மொழிபெயர்த்துரைக்க வேண்டாம் என்று நீங்கள் எண்ணும் எதையும் சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மொழிபெயர்த்துரைப்பாளர் மொழிபெயர்த்துரைப்பார், எனவே மற்ற மொழியில் மொழிபெயர்த்துரைக்க வேண்டாம் என்று நீங்கள் எண்ணும் எதையும் சொல்ல வேண்டாம்.
அமர்விற்குப் பிறகு
- தேவைப்பட்டால் கலந்துரையாடுங்கள். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது பின்னூட்டம் தேவைப்பட்டாலோ மொழிபெயர்த்துரைப்பாளருடன் பேசுங்கள். மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பல தொழில் வல்லுநர்களுடன் பணிபுரிகிறார்கள், மேலும் எதிர்கால அமர்வுகளில் தகவல்தொடர்பை மேம்படுத்த பயனுள்ள ஆலோசனைகளை வழங்க முடியும்.
- இரகசியத்தன்மையைப் பேணுங்கள். மொழிபெயர்த்துரைக்கப்பட்ட அமர்வுகளை, நீங்கள் பிற நேரடித் தகவல்தொடர்பைக் கையாளுவது போலவே கையாளுங்கள். பகிரப்பட்ட அனைத்து தகவல்களும் இரகசியமாகவே இருக்கும்.
கூடுதல் ஆதாரவளங்கள்
மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுவது பற்றிய கூடுதல் தகவல்களுக்குப் பின்வருவனவற்றைப் பார்வையிடவும்:
- மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கான AUSIT பொது வழிகாட்டுதல்கள்
- விக்டோரிய அரசாங்கத்தின் இடைக்கால வழிகாட்டுதல்கள்: மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுதல்
- குயின்ஸ்லாந்து சுகாதார சேவைகளின் மொழிபெயர்த்துரைப்பாளர் வழிகாட்டுதல்கள்
- மொழிச் சேவைகள் வழிகாட்டுதல்கள்: ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மொழிச் சேவைகள் வழிகாட்டுதல்கள்