மொழிபெயர்த்துரைத்தல் சந்திப்பு ஏற்பாட்டுக்கு அல்லது சந்திப்புக்குத் தயாராகுதல்
நல்ல தயார்ப்படுத்தலானது, மொழிபெயர்த்துரைத்தல் சந்திப்பு ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற உதவுகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு, உங்கள் மொழிபெயர்த்துரைப்பாளருக்குச் சரியான தகவல்களை வழங்குவதன் மூலம், நீங்கள் தவறான புரிதல்களைத் தவிர்க்கலாம், நேரத்தைச் சேமிக்கலாம், மற்றும் அனைவருக்கும் ஒரு தொழில்முறைச் சூழலை உருவாக்கலாம்
அத்தியாவசிய விவரங்களை வழங்குங்கள்
சந்திப்பின் தேதி, நேரம், இடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கால அளவு ஆகியவற்றை மொழிபெயர்த்துரைப்பாளர் முன்கூட்டியே அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அறை எண்கள், கட்டிட நுழைவு வழிமுறைகள் அல்லது தொலைதூரச் சந்திப்புகளுக்கான இணைப்புகள் போன்ற அணுகல் விவரங்களைச் சேர்க்கவும். இது அமர்வு சரியான நேரத்தில் தொடங்கி சுமுகமாக நடைபெற உதவுகிறது.
சரியான மொழிபெயர்த்துரைத்தல் முறையைத் தேர்ந்தெடுங்கள்
சந்திப்பு ஏற்பாட்டுக்கு முன், எந்த மொழிபெயர்த்துரைத்தல் முறை பயன்படுத்தப்படும் என்பதை முடிவு செய்யுங்கள், ஏனென்றால் இது நேரம் மற்றும் ஏற்பாடுகளைப் பாதிக்கிறது.
தொடர்ச்சியான மொழிபெயர்த்துரைத்தல்
பேச்சாளர் என்ன பேசினார் என்பதை மொழிபெயர்த்துரைப்பதற்கு முன், அவர் இடையில் நிறுத்தும் வரை மொழிபெயர்த்துரைப்பாளர் காத்திருப்பார். இந்த முறையானது பொதுவாகச் சந்திப்பு ஏற்பாடுகள் அல்லது சிறிய சந்திப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமர்வு, ஒரே மொழியில் நடக்கும் உரையாடலை விட சுமார் இரண்டு மடங்கு அதிக நேரம் எடுக்கும், எனவே உங்கள் அட்டவணையில் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள்.
சமநேர மொழிபெயர்த்துரைத்தல்
மொழிபெயர்த்துரைப்பாளர், தலையில் அணியும் ஒலிவாங்கிகள் (headsets) அல்லது மொழிபெயர்த்துரைத்தல் அறைகள் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்பார். தகவல் பரிமாற்றம் தடையின்றித் தொடர வேண்டிய பெரிய கூட்டங்கள், கருத்தரங்குகள் அல்லது குழு விவாதங்களுக்கு இந்த முறை மிகவும் பொருத்தமானது. இது மனரீதியாக சவாலான வேலை என்பதால், துல்லியத்தைப் பராமரிக்கவும் சோர்வைத் தவிர்க்கவும், மாறி மாறிப் பணியாற்றக்கூடிய குறைந்தது இரண்டு மொழிபெயர்த்துரைப்பாளர்களையாவது வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை முன்பதிவு செய்யும்போது, எந்த மாதிரியான முறை பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், மேலும் பொருத்தமான உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் மொழிச் சேவை வழங்குநரோ அல்லது மொழிபெயர்த்துரைப்பாளரோ சிறந்த அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளருக்கு விளக்கமளித்தல்
முடிந்தவரை, மொழிபெயர்த்துரைப்பாளருக்கு முன்கூட்டியே ஒரு விளக்கத்தை அளியுங்கள். விளக்கமளித்தல் என்பது, சந்திப்பின் நோக்கம், யார் கலந்துகொள்வார்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் ஆகியவற்றை நீங்கள் பகிர்ந்துகொள்வதாகும். எடுத்துக்காட்டாக, சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமானதா, தொழில்நுட்பம் சார்ந்ததா அல்லது நுண்ணிய உணர்வு கொண்டதா என்பதை மொழிபெயர்த்துரைப்பாளருக்குத் தெரியப்படுத்துங்கள். இது சரியான தொனியையும் கலைச்சொற்களையும் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவுகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த மொழி, சிறப்புக் கலைச்சொற்கள் அல்லது குறிப்பிட்ட வழக்குமொழிச் சொற்களைக் கோடிட்டுக் காட்டுங்கள், அப்போதுதான் மொழிபெயர்த்துரைப்பாளர் அதைத் துல்லியமாக மொழிபெயர்க்கத் தயாராக முடியும். அமர்வுக்கு முன் ஒரு சுருக்கமான உரையாடல் கூட நேரத்தை மிச்சப்படுத்தவும், தவறான புரிதல்களைத் தவிர்க்கவும், சீரான தகவல்தொடர்பை உறுதி செய்யவும் உதவும்.
முன்கூட்டியே ஆவணங்களைப் பகிரவும்
முடிந்தால், தொடர்புடைய ஆவணங்களையோ அல்லது சந்திப்பின் நிகழ்ச்சி நிரலையோ முன்கூட்டியே பகிரவும். இது மொழிபெயர்த்துரைப்பாளர் கலைச்சொற்களைத் தயார் செய்யவும் சூழலைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. நீங்கள் வழங்கும் எந்தவொரு தகவல்களோ அல்லது ஆவணங்களோ இரகசியமாகவே இருக்கும், ஏனெனில் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் இரகசியத்தன்மையைக் வலியுறுத்தும் ஒரு நன்னெறிக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
சந்திப்பின் போது உங்கள் வாடிக்கையாளருடன் பகிரும் ஆவணங்கள் அவர்களின் மொழியில் கிடைக்கவில்லை என்றால், அமர்வு தொடங்குவதற்கு முன்பு அதை மொழிபெயர்த்துரைப்பாளரிடம் வழங்கவும். இது அந்த ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சில சமயங்களில், அவர்களால் ஆவணத்தைப் படித்து மொழிபெயர்க்க முடியும். அதாவது, அவர்கள் அந்த ஆவணத்தை மற்றொரு மொழியில் உரக்க வாசிப்பார்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளரை அறிமுகப்படுத்துங்கள்
அமர்வு தொடங்குவதற்கு முன்பு, மொழிபெயர்த்துரைப்பாளரை அறிமுகப்படுத்தி, அங்குள்ள அனைவருக்கும் அவரது பங்களிப்பை விளக்குங்கள். மொழிபெயர்த்துரைப்பாளர் அனைத்துத் தரப்பினருக்கும் இடையேயான தகவல்தொடர்பை எளிதாக்குகிறார், ஒரு மொழியில் கூறப்படும் அனைத்தும் மற்றொரு மொழியில் துல்லியமாகத் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர்கள் தகவல்களைச் சேர்ப்பதோ, நீக்குவதோ அல்லது மாற்றுவதோ இல்லை, மேலும் அவர்கள் கருத்துகளையோ, ஆலோசனைகளையோ அல்லது விளக்கங்களையோ வழங்குவதில்லை.
நீங்கள் இது போன்ற ஒரு எளிய வாக்கியத்துடன் தொடங்கலாம்: “இவர் நமது மொழிபெயர்த்துரைப்பாளர், இன்று நாம் தொடர்பு கொள்ளுவதற்கு இவர் உதவுவார். நாம் கூறும் அனைத்தும் துல்லியமாகவும் இரகசியமாகவும் மொழிபெயர்த்துரைக்கப்படும்.”
இயல்பான உரையாடல் தடையின்றித் தொடர, மொழிபெயர்த்துரைப்பாளர் தன்மை வகையில் (அதாவது, “நான்”, “நாம்”) பேசுவார் என்பதைப் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டுங்கள். அனைவரும் மொழிபெயர்த்துரைப்பாளரிடம் பேசாமல், ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச வேண்டும், மேலும் மொழிபெயர்த்துரைத்தலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள்
- மொழிபெயர்த்துரைத்தல் அமர்வுகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்
- சிறுசிறு பகுதிகளாகப் பேசி, அவ்வப்போது இடைவெளி விடுங்கள்
- மொழிபெயர்த்துரைப்பாளருடன் அல்லாமல், உங்களது வாடிக்கையாளருடன் கண் தொடர்பைப் பேணுங்கள்
- தெளிவான, எளிய மொழியைப் பயன்படுத்துங்கள்
- வழக்குச் சொற்கள், மரபுத்தொடர்கள் அல்லது சிக்கலான ஒப்பீடுகளைத் தவிர்க்கவும்
- பொறுமையாக இருங்கள், சில மொழிகளில் ஒரே பொருளை வெளிப்படுத்தக் கூடுதலான அல்லது குறைவான சொற்கள் தேவைப்படும்.
இரகசியம் காப்பது, பாரபட்சமின்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றைக் கோரும் ஒரு நன்னெறிக் கோட்பாட்டை மொழிபெயர்த்துரைப்பாளர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது என்பது, நம்பிக்கையை வளர்க்கவும், அமர்வு முழுவதும் தொழில்முறைத் தொடர்பை உறுதி செய்யவும் உதவுகிறது.
கூடுதல் ஆதாரவளங்கள்
மொழிபெயர்த்துரைப்பாளர்களுடன் பணியாற்றுவது பற்றிய கூடுதல் தகவல்களுக்குப் பின்வருவனவற்றைப் பார்வையிடவும்:
- மொழிபெயர்த்துரைப்பாளர் வழியாகத் தொடர்புகொள்வது குறித்த AUSIT தகவல் தாள்
- மொழிபெயர்த்துரைப்பாளர்களை முன்பதிவு செய்வது மற்றும் அவர்களுக்கு விளக்கமளிப்பது குறித்த AUSIT தகவல் தாள்
- மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கு விளக்கமளிப்பது குறித்த ‘Language Loop’ வழிகாட்டி
- நேர்காணல்கள் மற்றும் கவனம் செலுத்தும் குழுக்களில் (Focus Groups) நேரடி மொழிபெயர்த்துரைப்பாளரைப் பயன்படுத்துவதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்