ஒரு தனிநபர் அல்லது மொழிச் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல்
உங்களுக்கு மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தல் சேவைகள் தேவைப்படும்போது, நீங்கள் ஒரு தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் அத்துடன் ஒரு மொழிச் சேவை வழங்குநர்(LSP) இவற்றுக்கிடையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
1. உங்கள் தேவைகளை வரையறுக்கவும்
- உங்களுக்குத் தேவைப்படும் சேவையின் வகையை அடையாளம் காணுங்கள்—மொழிபெயர்த்தல், மொழிபெயர்த்துரைத்தல், அல்லது இரண்டும்
- தேவையான மொழிகள் மற்றும் வட்டார மொழிகளைக் குறிப்பிடவும்
- குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் உங்களுக்குத் தேவையா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்
- செயல்திட்டமானது ஒருமுறை மட்டும் செய்யப்படுவதா அல்லது தொடர்ந்து நடைபெறுகிறதா என்பதையும், ஏதேனும் காலக்கெடு உள்ளதா என்பதையும் தீர்மானிக்கவும்
| தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் | மொழிச் சேவை வழங்குநர்கள் (LSPs) |
|---|---|
| தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள் நேரடித் தொடர்பையும் தனித்த அணுகுமுறையையும் வழங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் செலவு குறைவானவர்களாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், குறிப்பாக அரிதான மொழிகள் அல்லது சிறிய திட்டங்களுக்கு இது பொருந்தும். | மொழிச் சேவை வழங்குநர்களால் (LSPs) கருத்தரங்குகள், நிகழ்வுகள் அல்லது அதிக அளவிலான மொழிபெயர்ப்புப் பணிகள் போன்ற பல மொழிகளை உள்ளடக்கிய பெரிய செயல்திட்டங்களைக் கையாள முடியும். அவர்களிடம் அதிக மொழிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்துரைத்தல் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகள் கிடைக்கக்கூடும். |
2. நற்சான்றிதழ்களையும், தரத்தையும் சரிபார்க்கவும்
இந்த இணையதளத்தில் உள்ள ‘NAATI சான்றிதழைச் சரிபார்க்கவும்’ என்ற கருவியைப் பயன்படுத்தி, மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்த்துரைப்பாளர் NAATI-ஆல் சான்றளிக்கப்பட்டவரா என்பதைச் சரிபார்க்கவும். அவர்கள் AUSIT, ASLITA அல்லது NZSTI போன்ற ஒரு தொழில்முறை சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்களா என்றும் நீங்கள் கேட்கலாம்.
எப்போதும் அவர்களின் பரிந்துரைகளைச் சரிபார்க்கவும். மொழி சேவை வழங்குநர்களைப் (LSPs) பொறுத்தவரை, அவர்கள் NAATI-சான்றளிக்கப்பட்ட தொழில்புரிவோர்களுடன் பணிபுரிகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், தொழில்புரிவோரின் CPN-ஐக் கேட்டு, NAATI இணையதளத்தில் அவர்களின் சான்றிதழைச் சரிபார்க்கலாம். இணையவழி மதிப்புரைகளையும், பரிந்துரைகளையும் சரிபார்க்கவும். தரக் கட்டுப்பாட்டு செயல்முறைகள் குறித்துக் கேட்டு, தொடர்புடைய கலாச்சார விவரங்கள் மற்றும் கலைச்சொற்கள் குறித்த அவர்களின் பரிச்சயத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. செலவுகள் மற்றும் மதிப்பை ஒப்பிடுங்கள்
விலையை ஒப்பிடுவதற்குப் பல விலைப்புள்ளிகளைப் (quotes) பெறுங்கள். தனிநபர்களுக்கு, அவசரக் கட்டணங்கள் போன்ற மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மொழிச் சேவை வழங்குநர்களுக்கு (LSPs), செயல்திட்ட மேலாண்மை, தர உறுதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் மதிப்பைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு தேவையா?
ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்காகப் பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் போன்ற ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை மொழிபெயர்க்க வேண்டுமென்றால், பொதுவாக அந்த மொழிபெயர்ப்பு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் செய்யப்பட வேண்டும். நீங்கள் ஒரு மொழிச் சேவை வழங்குநரை (LSP) பணியமர்த்தத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த மொழிபெயர்ப்பை ஒரு NAATI-சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்தான் முடிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.